தமிழ் தயாரிப்பாளர்களிடம் ஒற்றுமை இல்லை: பாலச்சந்தர் வேதனை!!
தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு வருகிற 7 ந் தேதி தேர்தல் நடக்கிறது. இதில் கேயார் தலைமையில் ஒரு அணியினரும், கலைப்புலி எஸ்.தாணு தலைமையில் ஒரு அணியினரும் போட்டியிடுகிறார்கள். சிவசக்தி பாண்டியன் மூன்றாவது அணி அமைத்திருக்கிறார். தற்போது மூன்று அணியினருமே ஓட்டு வேட்டையில் இறங்கி உள்ளனர். கலைப்புலி எஸ்.தாணு தலைமையிலான வேட்பாளர் அறிமுக கூட்டம் 5 நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நேற்று (செப்படம்பர் 1) நடந்தது. இதில் வேட்பாளர்களை கே.பாலச்சந்தர் அறிமுகப்படுத்தி வைத்து பேசினார்.
அப்போது அவர் உருக்கமாக ஆற்றிய உரை வருமாறு: தாணு எதையுமே பெருசாக செய்யக்கூடியவர். தலைவராக வெற்றி பெற்று அதையும் பெருசாக செய்வார் என்று நம்புகிறேன். தமிழ் தயாரிப்பாளர்களிடையே ஒற்றுமை குலைந்து விட்டது. ஆந்திராவில் உள்ள தயாரிப்பாளர்கள் மிகவும் ஒற்றுமையாக இருக்கிறார்கள். நாம் ஏன் சண்டைபோட்டுக் கொண்டிருக்கிறோம் என்று தெரியவில்லை. மனசுக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. தமிழர்கள் நல்லவர்களா கெட்டவர்களா என்று புரியவில்லை. தமிழ் சினிமாவின் எல்லா துறைகளிலும் ஒற்றுமை குலைந்து பிரச்னைகள் பெருகி வருகிறது. நான் பெப்சிக்கு மூன்று ஆண்டுகள் தலைவராக இருந்தேன். அப்போது அது அமைதியான காலம். எந்த பிரச்னையும் வந்ததில்லை. சேம்பரில் தலைவராக இருந்திருக்கிறேன். இயக்குனர் சங்கத்தில் பணியாற்றி இருக்கிறேன். நான் பணியாற்றும் காலங்களில் அமைதியாக அதை நடத்தியிருக்கிறேன். இப்போது ஏன் அமைதி குறைந்து விட்டது என்று தெரியவில்லை.
மூத்த இயக்குனர், எனது வயது, 45 வருட சினிமா அனுபவம், பல்வேறு யூனியனில் பொறுப்பில் இருந்தவன் என்ற தகுதியில் கேட்கிறேன். விருப்பு வெறுப்புகளை மறந்து ஒற்றுமையுடன் செயல்படுங்கள். சங்கத்தில் தேர்தல் தவிர்க்க முடியாதது. அந்த தேர்தலை அமைதியாக நடத்துங்கள். ஒற்றுமையாக இருங்கள். சங்கத் தேர்தலில் போட்டியிடாத அனுபவஸ்தர்களை நியமன செயற்குழு உறுப்பினராக்குங்கள், புதிதாக படம் எடுக்க வந்து வெற்றி பெற்ற தயாரிப்பாளருக்கு பொறுப்பு கொடுங்கள். அப்போதுதான் வருங்காலத்தில் சங்கம் நல்ல முறையில் செயல்படும்.
இவ்வாறு கே.பாலச்சந்தர் பேசினார்.
No comments:
Post a Comment