Saturday, 7 September 2013

தயாரிப்பாளர் சங்க தேர்தல் முடிவு: கேயார் அணி சூப்பர் வெற்றி: தாணு அணி பரிதாப தோல்வி

தயாரிப்பாளர் சங்க தேர்தல் முடிவு: கேயார் அணி சூப்பர் வெற்றி: தாணு அணி பரிதாப தோல்வி

தமிழ்நாடு தயாரிப்பாளர் சங்கத்திற்கு 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடக்கும். கடந்த முறை எஸ்.ஏ.சந்திரசேகர் தலைமையிலான அணி பெருவாரியான இடத்தில் வெற்றி பெற்று நிர்வாகத்தை கைப்பற்றியது. அந்த நிர்வாகத்தின் மீது கடந்த இரண்டு ஆண்டுகளாக உறுப்பினர்கள் நம்பிக்கை இழந்து நின்றனர். கோர்ட் படிக்கட்டுகளில் ஏறிய சங்கம் தனது செயல்பாடுகளை இழந்து நின்றது. இந்த நிலையில் 2013-2015ம் ஆண்டுக்கான தேர்தலை ஓய்வுபெற்ற நீதிபதிகளை பார்வையாளராக கொண்டு நடத்துங்கள் என்று கோர்ட் உத்தரவிட்டது. அதன்படி ஐகோர்ட் நீதிபதிகள் ஜெகதீசன், வெங்கட்ராமன் ஆகியோர் முன்னிலையில் நேற்று தேர்தல் நடந்தது. இதில் கேயார், தாணு, சிவசக்தி பாண்டியன் ஆகியேர் தனித் தனி அணிகளை உருவாக்கி போட்டியிட்டனர்.

நேற்று (செப்டம்பர் 7) காலை 9 மணிக்கு வாக்குபதிவு தொடங்கி மாலை 4.30 மணிக்கு முடிவடைந்தது. ரஜினி, கமல், விஜயகாந்த், உள்பட முன்னணி நட்சத்திரங்களும் வந்து ஓட்டளித்தனர். ஓட்டளிக்கும் உரிமை பெற்ற 832 பேரில் 708 பேர் நேற்று ஓட்டளித்தனர். மின்னணு ஓட்டுப்பதிவு என்பதால் ஓட்டுப்பதிவு முடிந்த ஒரு மணிநேரத்திற்குள் முடிவுகள் அறிவிக்கப்பட்டது.

அதில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட கேயார், எதிர்த்து போட்டியிட்ட தாணுவை விட 197 ஓட்டுகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். துணை தலைவர்களாக சுபாஷ் சந்திரபோஸ், டி.ஜி.தியாகராஜன், செயலாளர்களாக ஞானவேல்ராஜா, டி.சிவா பொருளாளராக ஆர்.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றனர். இவர்கள் அனைவரும் கோயர் அணியைச் சேர்ந்தவர்கள்.

21 பேர் கொண்ட செயற்குழுவில் 18 பேர் கேயார் அணியை சேர்ந்தவர்கள் வெற்றி பெற்றார்கள். கருணாஸ், கோவைத்தம்பி, ராதாரவி ஆகியோர் மட்டுமே தாணு அணியைச் சேர்ந்தவர்கள். தாணு அணிக்கு கிடைத்த ஆறுதல் வெற்றி இவர்கள்தான்.

தேவயானி ஸ்பெஷல்

இந்த தேர்தலில் ஸ்டார் அட்ராக்ஷனாக இருந்தவர் தேவயானி. திருமதி.தமிழ் படத்தின் மூலம் தயாரிப்பாளரான தேவயானி கேயார் அணி சார்பில் செயற்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டார். தயாரிப்பாளர்களின் வீடு வீடாக சென்று ஓட்டு கேட்டார். செல்போனில் தன் குரலிலேயே கனிவாக பேசி ஓட்டுக்கேட்டார். தேர்தல் நடந்த இடத்தில் காலை முதல் மாலைவரை நின்று கொண்டே அனைவருக்கும் வணக்கம் வைத்து அண்ணா உங்க தங்கச்சிக்கு ஒரு போட்டுருங்கண்ணா என்று சென்டிமென்ட்டாக பேசி டச் பண்ணினார். எல்லாமே அவருக்கு ஒர்க்அவுட் ஆக கமிட்டி உறுப்பினர்களிலேயே அதிக ஓட்டுக்கள் பெற்று வெற்றி பெற்றார். தேவயானி வெற்றி பெற்றது தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்களுக்கு ரொம்பவே சந்தோஷத்தை கொடுத்துள்ளது.

No comments:

Post a Comment